Thursday, February 11, 2010

ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லாதே - 144 தடை உத்தரவு!

நிகழ்காலத் தமிழர் பண்பாடு - பேரைச் சொல்லாதே!

ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக்கூடாது.  இந்த 144 வாய்மொழி உத்தரவு இன்று தமிழகமெங்கும் அமலில் இருக்கிறது.  இந்த உத்தரவுக்குக் கீழ்ப்படியாத குற்றவாளிகளுக்கு ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனையுடன் அடி உதையும் தரப்படும் என்பது எழுதப்படாத தண்டனை.

அப்பா வைத்த பெயர் ஒன்று; தானே சூட்டிக்கொண்ட பெயர் ஒன்று; புனைப்பெயர் ஒன்று. தொண்டர்கள் அன்புடன், பிரியமுடன் அழைக்கும் செல்லப் பெயர் ஒன்று.  ”அன்பளிப்பு” அல்லது அது கிடைக்காமல்போனால் சிலபல பேரங்கள் மூலம் தானே வந்து சேரும் கொடையினை வகைப்படுத்தப் பயன்படும் “பினாமி” பெயர் ஒன்று - என்று ஒருவரே பலப்பல பெயருடன் விளங்குவதால், பேரைச் சொல்லாதே என்று எச்சரிக்கை செய்வது நியாயம்தான்.

இது மட்டுமல்ல.  தனக்கு அமைந்த இல்லாளுக்கு மனைவி என்று பெயர்.  தானே வலிந்து இழுத்துக்கொண்ட இன்னொரு சின்னவீட்டுக்குத் துணைவி என்று பெயர்.  இரண்டும் இல்லாமல் இன்னல் வந்து வந்து போவது போல இன்பம் தந்து தந்து போகும் ஒருத்திக்கு girl friend என்று பெயர். தினத்தந்தி ஆதித்தனார் வைத்த பெயரோ அழகி. இலக்கியத்திலோ நாயகி.

தமிழ்நாட்டைத்தவிர, உலகெங்கும், பரம்பரைப் பெயருக்குத் தரப்படும் மதிப்பும் மாண்பும் அளவிட முடியாதது. பஞ்சாப் மாநிலத்துக்குச் சென்று பார்த்தால் இந்த உண்மை தெற்றெனப் புலப்படும். ஏன், தமிழ்நாட்டுச் சரித்திரத்திலும் கூட, அரசர்களுக்குச் சூட்டப்பட்ட பட்டங்களும், அடைமொழிகளும் வெறும் பட்டங்களாக மற்றும் நின்றன.  அரசர்கள் என்றும் பெயர் இழந்ததில்லை.
”கங்கைகொண்டான்” “கடாரம்கொண்டான்” என்றெல்லாம் பட்டம் பெற்ற சோழப்பேரரசன் “ராஜராஜசோழன்” என்றுதான் சரித்திர ஏடுகளில் குறிப்பிடப்படுகிறான். ஆகையால், இன்று தான் விரும்பும் பட்டப்பெயர்களால்தான் அழைக்கப்படவேண்டும் எழுதப்படவேண்டும் என்றெல்லாம் அகந்தையால் உந்தப்படும் நபர்கள் காலப்போக்கில் பெயரிலிகளாக ஆகிவிட்டாலும் ஆச்சரியமில்லை.

மகாத்மா காந்தி எம்.கே. காந்தி என்றுதான் அழைக்கப்பட்டார்.  அவர் கோபப்பட்டதில்லை.  தன்னை மகாத்மா என்றுதான் அழைக்கவேண்டும் என்று எச்சரித்ததில்லை.
ஜவாஹர்லால் நேரு ஜவாஹர் என்றுதான் அழைக்கப்பட்டார்.  அவர் கோபித்துகொண்டதில்லை.
காமராஜரைக் காமராஜ் என்றுதான் அழைத்தார்கள். அவர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. என்னை ஏன் கர்மவீரர் என்று அழைக்கவில்லை என்று ஆத்திரப்படவில்லை.
இந்திரா காந்தியை இந்திரா என்றுதான் அழைத்தார்கள்.  அதற்காக அவர் எகிறிக்குதிக்கவில்லை.
ஊ.வே.சாமிநாதய்யரை சாமிநாதா, சாமிநாதய்யர் என்றுதான் கூப்பிட்டார்கள்.

உலக அளவில், பெரும் மரியாதைக்குரிய அரசியல் தலைவர்கள், அவர்களது முதல் எழுத்துக்களால் (initials) அழைக்கப்படுகிறார்கள்.  JFK (John F Kennedy), FDR (Franklin D Roosevelt), TR ( Ted Roosevelt).
அடுத்த இடத்தில் மரியாதை பெறுபவர்கள் அவர்களது முழுப்பெயரால் குறிப்பிடப்படுபவர்கள். Harry Truman, Woodrow Wilson.
அதற்கு அடுத்த இடத்தைப் பிடிப்பவர்கள் அவர்களது செல்லப்பெயர்களால் (மரியாதையுடனும் ப்ரியத்துடனும்) அழைக்கப்படுபவர்கள். Jimmy (James), Danny (Daniel)
அடிமட்டத்தில்  இருப்பவர்கள் முழுப்பெயரும் இன்றி, முதல் எழுத்துக்களும் இன்றி, செல்லப்பெயரும் இல்லாமல், மொட்டையாகப் பெயரால் மட்டும் குறிப்பிடப்படுபவர்கள். Nixon, Hoover.

ஆனால் நமது தமிழ்நாட்டு அரசியல் வியாதிகள் மட்டும் தம்மைப் பெயரிட்டு அழைப்பதை மரியாதைக்குறைவாகக் கருதுகிறார்கள்.  அதுமட்டுமா, தன் ஊரைமுன்னாலும் “ஆர்”யைப் பின்னாலும், கடிவாளமும் சேணமும் போலத் தரித்துக்கொண்ட்டு “டிஜிடல் போஸ்டர்” போட்டுக்கொள்ளுகிறார்கள்.
இதற்குக் காரணம் என்ன?

உளவியல் ரீதியாகத், தனக்குப் பெயர் வைத்த தன் தந்தையை அவமானப்படுத்தவேண்டும் என்ற வக்ரமும் மனவிகாரமும் தான் காரணமோ?

ரோஜாவுக்கு என்ன பெயரிட்டு அழைத்தால் என்ன?  ரோஜா ரோஜா தான்.
கள்ளிப்பூக்கு என்ன பெயரிட்டு அழைத்தால் என்ன? கள்ளிப்பூ ரோஜா ஆகாது தான்.

பதிவர் ஜோதி தனது “புன்னகை”யில் பண்புடன் பாடுகிறார்:

"பெரியவரின் பெயரை கூப்பிட்ட பொழுதொன்று
கைகலப்பில் முடிந்தது!
மற்றொரு நாளில்
பெயரை சொல்லும் பேத்தியின்
மழலைப்பேச்சு பெரியவரின்
பெருமையாகிப் போனது"

பெயர் என்பது ஒரு அடையாளம் என்பதைப் புரிந்துகொண்டால், மானாவமானத்துக்கு இடமேது?







Wednesday, February 3, 2010

கத்தரிக்காய் அரசியல்

கடந்த சில வாரங்களாகக் கத்தரிக்காய் படும்பாட்டைப் பார்த்து மக்கள் மூக்கில் விரலை வைத்துக்கொண்டு அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.  எட்டாத உயரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் விலையோ இறங்குவதாகத் தெரியவில்லை.

பொதுமக்களுக்கு விலைவாசி நெருக்கடியை உண்டாக்கிக்கொண்டிருக்கும் கத்தரிக்காய், அரசியல்வாதிகளுக்கு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

ஜெய்ராம் ரமேஷுக்கு ஹைதராபாத்தில் கத்தரிக்காய் மாலை போடுகிறார்கள். ஷரத் பவார், தனக்கும் கத்தரிக்காய்க்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று ஓ வென்று கதறுகிறார்.  நமது முதல்வர் கூட, மத்திய அரசு இறுதி முடிவெடுக்கும்வரை கத்தரிக்காய் தமிழகத்துள் நுழையவிடமாட்டோம் என்று அறிக்கை விடுகிறார்.  வேளாண் விஞ்ஞானியும் எம்.பி.யும் ஆன எம்.எஸ். ஸ்வாமிநாதன் வேறு களத்தில் குதித்திருக்கிறார்.

என்ன ஆகுமோ என்று பி.டி. கத்தரிக்காய்த் தவியாய்த் தவித்துக்கொண்டிருக்கிறது.  

இந்தச் சூழ்நிலையில் என் பாட்டி சொன்ன கத்தரிக்காய்க் கதை நினைவுக்கு வருகிறது.

முன்னொரு காலத்தில் ஒரு ராஜாவும் மந்திரியினரும் உணவருந்தச் சென்றார்கள்.  அன்றைக்குச் சாப்பாட்டில் கத்தரிக்காய்ப் பொரியல்.  ராஜா மந்திரியைப் பார்த்து “கத்தரிக்காய் உடம்புக்கு நல்லது; அதில் நிறையச் சத்துக்கள் இருக்கின்றன” என்கிறார்களே! அப்படித்தானே?” என்று வினவ, மந்திரிமார்களும் “ஆமாம் மன்னனே! காயில் சிறந்தது கத்தரிக்காய்தான்” என்று கோரஸ் பாடினர்.  மன்னர் “அது எப்படி?” என்று வினா எழுப்பினார். “இது ஆண்டவனுக்கே தெரியும் மன்னா! அதனால்தான் அதன் தலையில் கிரீடம் வைத்திருக்கிறார்” என்று கத்தரிக்காயின் காம்பைக் காட்டினர்.

மன்னருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.  அன்றிலிருந்து, கத்தரிக்காய்க் குழம்பு, கத்தரிக்காய் சாம்பார், கத்தரிக்காய்ப் பொரியல், வறுவல், வத்தல் என்று கத்தரிக்காய்ப் பிரியர் ஆகிவிட்டார்.

நாட்கள் பல சென்றன.  விதம் விதமான ருசியை அனுபவித்த ராஜாவின் நாக்குக்குச் சலிப்புத் தட்ட ஆரம்பித்துவிட்டது. மந்திரிசபையை கூட்டினார். “கத்தரிக்காய் ரொம்ப மோசம்” என்று கடுப்படித்தார்.  மந்திரிமார்களுக்குப் பயம் வந்துவிட்டது.  “ஆமாம் மன்னா! காயிலே மோசம் கத்தரிக்காய்தான்” என்று ராஜாவின் பாட்டுக்குத் தாளம் போட்டனர். வழக்கம்போலவே “அது எப்படி?” என்று ராஜா கேள்விக் கொக்கி போட்டார்.  “அது ஆண்டவனுக்கே தெரியும் மன்னா! அதனால் தான் கடவுள் கத்தரிக்காய் தலையில் மு்ள்ளைக்குத்தி வைத்திருக்கிறார்” என்று பதிலளித்துக் கத்தரிக்காயின் காம்பைக் காட்டினராம்.

மன்னன் எவ்வழி!
மந்திரி அவ்வழி!

இந்தக்கதை இன்றைய அரசியலுக்கும் பொருந்தும்போலத் தோன்றுகிறது.