Wednesday, February 3, 2010

கத்தரிக்காய் அரசியல்

கடந்த சில வாரங்களாகக் கத்தரிக்காய் படும்பாட்டைப் பார்த்து மக்கள் மூக்கில் விரலை வைத்துக்கொண்டு அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.  எட்டாத உயரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் விலையோ இறங்குவதாகத் தெரியவில்லை.

பொதுமக்களுக்கு விலைவாசி நெருக்கடியை உண்டாக்கிக்கொண்டிருக்கும் கத்தரிக்காய், அரசியல்வாதிகளுக்கு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

ஜெய்ராம் ரமேஷுக்கு ஹைதராபாத்தில் கத்தரிக்காய் மாலை போடுகிறார்கள். ஷரத் பவார், தனக்கும் கத்தரிக்காய்க்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று ஓ வென்று கதறுகிறார்.  நமது முதல்வர் கூட, மத்திய அரசு இறுதி முடிவெடுக்கும்வரை கத்தரிக்காய் தமிழகத்துள் நுழையவிடமாட்டோம் என்று அறிக்கை விடுகிறார்.  வேளாண் விஞ்ஞானியும் எம்.பி.யும் ஆன எம்.எஸ். ஸ்வாமிநாதன் வேறு களத்தில் குதித்திருக்கிறார்.

என்ன ஆகுமோ என்று பி.டி. கத்தரிக்காய்த் தவியாய்த் தவித்துக்கொண்டிருக்கிறது.  

இந்தச் சூழ்நிலையில் என் பாட்டி சொன்ன கத்தரிக்காய்க் கதை நினைவுக்கு வருகிறது.

முன்னொரு காலத்தில் ஒரு ராஜாவும் மந்திரியினரும் உணவருந்தச் சென்றார்கள்.  அன்றைக்குச் சாப்பாட்டில் கத்தரிக்காய்ப் பொரியல்.  ராஜா மந்திரியைப் பார்த்து “கத்தரிக்காய் உடம்புக்கு நல்லது; அதில் நிறையச் சத்துக்கள் இருக்கின்றன” என்கிறார்களே! அப்படித்தானே?” என்று வினவ, மந்திரிமார்களும் “ஆமாம் மன்னனே! காயில் சிறந்தது கத்தரிக்காய்தான்” என்று கோரஸ் பாடினர்.  மன்னர் “அது எப்படி?” என்று வினா எழுப்பினார். “இது ஆண்டவனுக்கே தெரியும் மன்னா! அதனால்தான் அதன் தலையில் கிரீடம் வைத்திருக்கிறார்” என்று கத்தரிக்காயின் காம்பைக் காட்டினர்.

மன்னருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.  அன்றிலிருந்து, கத்தரிக்காய்க் குழம்பு, கத்தரிக்காய் சாம்பார், கத்தரிக்காய்ப் பொரியல், வறுவல், வத்தல் என்று கத்தரிக்காய்ப் பிரியர் ஆகிவிட்டார்.

நாட்கள் பல சென்றன.  விதம் விதமான ருசியை அனுபவித்த ராஜாவின் நாக்குக்குச் சலிப்புத் தட்ட ஆரம்பித்துவிட்டது. மந்திரிசபையை கூட்டினார். “கத்தரிக்காய் ரொம்ப மோசம்” என்று கடுப்படித்தார்.  மந்திரிமார்களுக்குப் பயம் வந்துவிட்டது.  “ஆமாம் மன்னா! காயிலே மோசம் கத்தரிக்காய்தான்” என்று ராஜாவின் பாட்டுக்குத் தாளம் போட்டனர். வழக்கம்போலவே “அது எப்படி?” என்று ராஜா கேள்விக் கொக்கி போட்டார்.  “அது ஆண்டவனுக்கே தெரியும் மன்னா! அதனால் தான் கடவுள் கத்தரிக்காய் தலையில் மு்ள்ளைக்குத்தி வைத்திருக்கிறார்” என்று பதிலளித்துக் கத்தரிக்காயின் காம்பைக் காட்டினராம்.

மன்னன் எவ்வழி!
மந்திரி அவ்வழி!

இந்தக்கதை இன்றைய அரசியலுக்கும் பொருந்தும்போலத் தோன்றுகிறது.

1 comment:

சுபத்ரா said...

கதை நன்றாக இருக்கிறது :-)