Wednesday, February 3, 2010

கத்தரிக்காய் அரசியல்

கடந்த சில வாரங்களாகக் கத்தரிக்காய் படும்பாட்டைப் பார்த்து மக்கள் மூக்கில் விரலை வைத்துக்கொண்டு அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.  எட்டாத உயரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் விலையோ இறங்குவதாகத் தெரியவில்லை.

பொதுமக்களுக்கு விலைவாசி நெருக்கடியை உண்டாக்கிக்கொண்டிருக்கும் கத்தரிக்காய், அரசியல்வாதிகளுக்கு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

ஜெய்ராம் ரமேஷுக்கு ஹைதராபாத்தில் கத்தரிக்காய் மாலை போடுகிறார்கள். ஷரத் பவார், தனக்கும் கத்தரிக்காய்க்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று ஓ வென்று கதறுகிறார்.  நமது முதல்வர் கூட, மத்திய அரசு இறுதி முடிவெடுக்கும்வரை கத்தரிக்காய் தமிழகத்துள் நுழையவிடமாட்டோம் என்று அறிக்கை விடுகிறார்.  வேளாண் விஞ்ஞானியும் எம்.பி.யும் ஆன எம்.எஸ். ஸ்வாமிநாதன் வேறு களத்தில் குதித்திருக்கிறார்.

என்ன ஆகுமோ என்று பி.டி. கத்தரிக்காய்த் தவியாய்த் தவித்துக்கொண்டிருக்கிறது.  

இந்தச் சூழ்நிலையில் என் பாட்டி சொன்ன கத்தரிக்காய்க் கதை நினைவுக்கு வருகிறது.

முன்னொரு காலத்தில் ஒரு ராஜாவும் மந்திரியினரும் உணவருந்தச் சென்றார்கள்.  அன்றைக்குச் சாப்பாட்டில் கத்தரிக்காய்ப் பொரியல்.  ராஜா மந்திரியைப் பார்த்து “கத்தரிக்காய் உடம்புக்கு நல்லது; அதில் நிறையச் சத்துக்கள் இருக்கின்றன” என்கிறார்களே! அப்படித்தானே?” என்று வினவ, மந்திரிமார்களும் “ஆமாம் மன்னனே! காயில் சிறந்தது கத்தரிக்காய்தான்” என்று கோரஸ் பாடினர்.  மன்னர் “அது எப்படி?” என்று வினா எழுப்பினார். “இது ஆண்டவனுக்கே தெரியும் மன்னா! அதனால்தான் அதன் தலையில் கிரீடம் வைத்திருக்கிறார்” என்று கத்தரிக்காயின் காம்பைக் காட்டினர்.

மன்னருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.  அன்றிலிருந்து, கத்தரிக்காய்க் குழம்பு, கத்தரிக்காய் சாம்பார், கத்தரிக்காய்ப் பொரியல், வறுவல், வத்தல் என்று கத்தரிக்காய்ப் பிரியர் ஆகிவிட்டார்.

நாட்கள் பல சென்றன.  விதம் விதமான ருசியை அனுபவித்த ராஜாவின் நாக்குக்குச் சலிப்புத் தட்ட ஆரம்பித்துவிட்டது. மந்திரிசபையை கூட்டினார். “கத்தரிக்காய் ரொம்ப மோசம்” என்று கடுப்படித்தார்.  மந்திரிமார்களுக்குப் பயம் வந்துவிட்டது.  “ஆமாம் மன்னா! காயிலே மோசம் கத்தரிக்காய்தான்” என்று ராஜாவின் பாட்டுக்குத் தாளம் போட்டனர். வழக்கம்போலவே “அது எப்படி?” என்று ராஜா கேள்விக் கொக்கி போட்டார்.  “அது ஆண்டவனுக்கே தெரியும் மன்னா! அதனால் தான் கடவுள் கத்தரிக்காய் தலையில் மு்ள்ளைக்குத்தி வைத்திருக்கிறார்” என்று பதிலளித்துக் கத்தரிக்காயின் காம்பைக் காட்டினராம்.

மன்னன் எவ்வழி!
மந்திரி அவ்வழி!

இந்தக்கதை இன்றைய அரசியலுக்கும் பொருந்தும்போலத் தோன்றுகிறது.

Saturday, January 30, 2010

”மஹாத்மா”





இன்று மஹாத்மா காந்தி அவர்கள் அமரத்துவம் அடைந்த தினம்.

திரு மு. கருணாநிதி அவர்கள் தலைமையில் அமைந்துள்ள தமிழ்நாட்டு அரசாங்கம் மஹாத்மாவை “மஹாத்மா” என்று ஒப்புக்கொள்ளவில்லை.
“உத்தமர்” என்ற அளவிலே மட்டும் ஒப்புக்கொள்ளுகிறது.

மஹாத்மா காந்தி சாலை என்ற பெயரை “உத்தமர் காந்தி” என்று மாற்றி ஆணை இடுவதிலே பெருமிதம் கொள்ளுகிறது.

மஹாத்மா என்ற சொல் வடமொழிச் சொல்லாம்.  அதற்குப் பொருள் உத்தமராம்.

இது சரிதானா?

மஹாத்மா என்ற சொல்லுக்கு   மாந்தருக்குள் ஒரு தெய்வம் என்று பொருள் கொள்ளலாம்.  ஆன்மீகத்திலே தலைசிறந்து நிற்பவர்; பண்பின் சிகரம்; நெடிது நிற்கும் சான்றோர் என்று சொல்லலாம்.  இந்தப் பண்பு நலங்களின் ஒட்டுமொத்தப் பொருளமைந்த சொல் “மஹாத்மா”.

“உத்தமர்” என்ற சொல்லும் வடமொழிச்சொல்லே! சான்றோர்; மனிதப் பண்புகளில் உயர்ந்தவர் என்று பொருள்படுவது. திராவிடர் கழகப் பற்றாளர்கள் அடிக்கடி பயன்படுத்தும் மனிதநேயர் என்றும் சொல்லலாம். ஆன்மீகத்தை ஒப்புக்கொள்ளாதவர்களில் உத்தமர்கள் இருக்கலாம்.   ஆனால் உத்தமர்கள் எல்லோரும் மஹாத்மாக்களாக இருக்கமுடியாது.

மஹாத்மா காந்தி வெறும் மனித நேயர் மட்டுமா?  கேவலம் அவர் மனிதர்களில் உத்தமர் மட்டும்தானா? இன்றையத் தமிழ்நாட்டு அரசுக்கும் அதை நடத்தும் அரசர்களுக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.

ஃப்ரெஞ்ச், இத்தாலி, ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலமொழிகளில் மஹாத்மா என்றே அழைக்கிறார்கள்; எழுதுகிறார்கள்.

இந்தச் செய்தியைப் படியுங்கள்:

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தென் மேற்கு ஹூஸ்டன் பகுதியில் ஹில்கிராப்ட் மாவட்டத்தில் தெற்குஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் தங்கியுள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்துக்கும் மேல் அமெரிக்க வாழ் இந்தியர்கள் உள்ளனர்.
இவர்கள் இங்கு பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். பலர் அலுவலக பணிகளிலும் ஈடுப்பட்டுள்ளனர். எனவே இப்பகுதியை “குட்டி இந்தியா” என்று செல்லமாக அழைப்பது வழக்கம்.
எனவே டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹில்கிராப்ட் மாவட்டத்துக்கு இந்தியாவின் தேச பிதா மகாத்மா காந்தியின் பெயரை சூட்ட வேண்டும் என அமெரிக்க வாழ் இந்தியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
கடந்த 7 ஆண்டுகளாக விடுத்து வந்த இவர்களது கோரிக்கை மகாத்மா காந்தியின் 141-வது பிறந்த ஆண்டான தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. ஹில்கிராப்ட் மாவட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயரை சூட்டுவதாக ஹ¨ஸ்டன் நகர மேயர் ஆன்னிஸ்பார்கர் அறிவித்தார். இந்த மாவட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர் சூட்டப்பட்டதற்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்  

அமெரிக்காவில் உள்ள  ஹில்கிராஃப்ட் மாவட்டத்திற்கு “மஹாத்மா காந்தி” மாவட்டம் என்று பெயர் சூட்டப்படுகிறது.
தமிழ்நாட்டில் சென்னையில் “மஹாத்மா காந்தி சாலை” என்று வழங்கி வந்த சாலையின் பெயர் “உத்தமர் காந்தி” சாலையாக கோணல்மனம் கொண்டவர்களால் மாற்றப்படுகிறது.

உலக மாந்தரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர் மஹாத்மா காந்தி.
உலகம் முழுவதும் மஹாத்மா என்று சொன்னால் அது காந்தி அடிகளைத்தான் குறிக்கிறது என்று மனப்பூர்வமாக நம்புகிறார்கள்.
மஹாத்மா காந்தி சாலையை உத்தமர் காந்தி சாலையாக்கியவர்கள்?